தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 19.09.2025. வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கௌரவ நகரசபை தவிசாளர்,கௌரவ பிரதேச சபை தவிசாளர் மற்றும் நகர ,பிரதேச சபைகளின் அழைக்கப்பட்ட கௌரவ உறுப்பினர்கள் , திணைக்களத் தலைவர்கள்,பிரதிநிதிகள், சாவகச்சேரி பொலீஸ் நிலைய உத்தியோகத்தர், இராணுவ அதிகாரிகள், சமூகமட்ட அமைப்புக்களது பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்கள் வரவேற்புரையாற்றுகையில் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரின் HA/DEVP/14/DCC/VOll viii இலக்க 2025.09.01 திகதிய உள்நாட்டலுவல்கள் பிரிவு சுற்று நிருபம் 03/2025இற்கமைய இக்கூட்டம் நடைபெறுவதாகவும் இச்சுற்றறிக்கையின் முக்கிய விடயங்களை குறிப்பிட்டும் உரையாற்றினார். தொடர்ச்சியாக தலைமை உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்கள் அனைவரும் இணைந்து தென் மராட்சி பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்து அபிவிருத்தி பணிகள், நலன்புரி மற்றும் சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களும் ஒன்றிணைந்த ஒரு வேலை திட்டத்தின் கீழ் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒன்றிணைந்த வகையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பிரஜைகள் மைய அபிவிருத்திக் கட்டமைப்பான "பிரஜாசக்தி" நிகழ்ச்சித் திட்டத்தின் கட்டமைப்பு,அதன் தொழிற்பாடுகள் தொடர்பாகவும் கிராமிய தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை இக்கட்டமைப்பின் ஊடாக அணுகி தீர்வு காணும் வழிவகைகள் தொடர்பாகவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.பின்னர் நிகழ்ச்சி நிரலின்படி, கூட்டத்திற்கு சமூகமளிக்க முடியாமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற கடிதத்தை பிரதேச செயலாளர் சபையில் வாசித்தார்.
இக்கூட்டத்தில் 27. 3.2025 அன்று இடம் பெற்ற கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முன்னேற்ற நிலைமைகள் விரிவாக ஆராயப்பட்டதோடு பிரதேசத்தில் தற்போது பல்வேறு அரச திணைக்களங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலை திட்டங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல், எழுதுமட்டுவாழ் மயான விடுவிப்பு, வீதிப்புனரமைப்பு பணிகள், வெள்ள அனர்த்த தணிப்பு நடவடிக்கைகள், கால்நடை வைத்திய சேவைகள், கால்நடைக் கட்டுப்பாடு, பயிர் அழிவு தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து, பொதுமக்களிற்கான காணி வழங்கற் செயற்பாடுகள், வைத்தியசாலை தேவைப்பாடுகள், பாடசாலை தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
![]() |
|
![]() |
![]() |

















